×

இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர் கோத்தபய ராஜபக்சே!: அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க அழைப்பு..!!

கொழும்பு: இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அனைத்துக்கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார். பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. உணவுக்கே தள்ளாடும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு முடங்கியுள்ளது. மின்சாரம் இல்லாத காரணத்தால் தினமும் 13 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனை கண்டித்து அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து வலுத்து வந்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த 31ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்தார். இதற்கிடையே, இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவியதால், நேற்று நள்ளிரவில் அமைச்சர்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து, இலங்கை அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மகிந்த ராஜபக்சே சந்தித்தார். இந்நிலையில், இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜினாமாக்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கெடுக்க வருமாறும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார். அனைத்து கட்சிகள் சார்பில் அமைச்சக பதவியை ஏற்று நெருக்கடியை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களை தொடர்ந்து இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்டு பதவி விலகி உள்ளார்….

The post இலங்கை அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றார் அதிபர் கோத்தபய ராஜபக்சே!: அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : President ,Gothabaya Rajapakse ,Colombo ,Maghinta ,Chancellor ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!